Thursday, July 30, 2009
யு.எஸ்., பிரிட்டனை விட மகிழ்ச்சியான நாடு இந்தியா!
புதுடெல்லி: வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் அமெரிக்கா, இங்கிலாந்தைக் காட்டிலும் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது இந்தியா.
இங்கிலாந்தைச் சேர்ந்த 'நியூ எகனாமிக்ஸ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப் படுத்தி, 'ஹேப்பி பிளானட் இன்டெஸ்' பட்டியலிட்டுள்ளது.
மொத்தம் 143 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 35வது இடத்தைப் பெற்றுள்ளது.
பொருளாதாரத்தில் நட்புணர்வுடனும், மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாழ்க்கைத் தரம், வாழ்க்கையில் பொருளாதாரம் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் வாழ்க்கையில் திருப்தி போன்றவற்றையும் கொண்டு தரப் பட்டியல் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் கோஸ்டா ரிகா முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா 35-வது இடத்தைப் பிடிக்க, அமெரிக்கா 114-வது இடத்திலும், இங்கிலாந்து 74வது இடத்திலும் உள்ளது. பிரேசில், சீனா முறையே 9 மற்றும் 20வது இடத்தை வகிக்கின்றன. ரஷ்யா இருப்பதோ 108-வது இடத்தில்.
பொருளாதாரத்தில் பின்னடைவில் உள்ள நாடுகளில் கூட மக்கள் வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்பும், அதில் முழு மன நிறைவும் பெறுகின்றனர் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.
இதன் மூலம், பணம் இல்லாமலே நல்ல நிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மேலும், மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment