Thursday, July 30, 2009

காதலர்கள் தம்பதியாக வாழ்வது மண வாழ்க்கைக்குப் பாதிப்பு : ஆய்வு


வாஷிங்டன்: திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே காதலர்கள் தம்பதிகளாக வாழ்க்கை நடத்தத் தொடங்கிவிடுவது, மண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் 'லிவிங் டுகெதர்' என்ற வாழ்க்கை முறை வெகுவாக காணப்படுகிறது. அதாவது, திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே கணவன் - மனைவியாக ஒரே வீட்டில் வாழும் முறை.

இத்தகைய வாழ்க்கை முறையை, திருமண வாழ்க்கைக்கு முன்னோட்டமாகவே அவர்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

இந்நிலையில், திருமண வாழ்க்கைக்கு முன்பு ஒன்றாக தம்பதி போன்று வாழ்பவர்கள் தான், திருமணத்துக்குப் பிறகு மிகுதியான எண்ணிக்கையில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர் என்று டென்வெர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் விவாகரத்துப் பெற்று வாழ்வோரை எடுத்துக் கொண்டால், அதில் திருமணத்துக்கு முன்பே தம்பதிகளாக வாழ்ந்தோரின் எண்ணிக்கை தான் மிகுதியாக இருக்கும் என்கிறது, அந்த ஆய்வு.

அத்துடன், திருமணத்துக்குப் பிறகு தம்பதிகளாக உடல் ரீதியாக உறவை வலுத்துப்படுத்துபவர்களைக் காட்டிலும், திருமணதுக்கு முன்பே உறவில் ஈடுபடுபவர்களுக்கு திருமண வாழ்க்கை பெரும்பாலும் திருப்தி தருவதில்லை என்று அந்த ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.

மூத்த ஆராய்ச்சியாளர் கலேனா ரோட்ஸ், ஆராய்ச்சி பேராசிரியர் ஸ்காட் ஸ்டான்லி, உளவியல் பேராசிரியர் மார்க்மென் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

"எவ்வித உளமார்ந்த புரிதலும் இன்றி, ஒன்றாக வாழ்ந்துவிட்டு திருமணம் செய்து கொள்வதே மணமுறிவுகளுக்குக் காரணம் என்றே கருதுகிறோம்," என்கிறார் மூத்த ஆராய்ச்சியாளர் கலேனா ரோட்ஸ்.

இந்த ஆய்வு மற்றும் அதன் முடிவு குறித்து பேராசிரியர் ஸ்காட் ஸ்டான்லி கூறும்போது, "லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது என்று முடிவு செய்யும் போது, திருமணம் குறித்த சில நிர்பந்தங்கள் குறித்து தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்," என்கிறார்.

இந்த உளவியல் ஆய்வு குறித்த முழுமையான விவரம், ஜர்னல் ஆஃப் ஃபேமிலி சைக்காலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment