Sunday, March 20, 2011

பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாறு


பரமேஸ்வரன் எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தருவிக்கப் பட்ட தமிழ்ச் சொல்.
பரமா எனும் சொல்லும் ஈசுவரன் எனும் சொல்லும் இணைந்து பெற்றதே பரமேசுவரன் எனும் சொல் ஆகும்.
இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈசுவரன்.

பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாறு

* 1344 - ஸ்ரீ ராணா வீரா கர்மா எனும் சிங்கப்பூர் ராஜாவுக்கு மகனாகப் பிறந்தார்.

* 1399 - தந்தையின் இறப்பிற்குப் பின் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா எனும் பெயரில் சிங்கப்பூர் அரியணை ஏறினார்.

* 1401 - சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

* 1402 - மலாக்காவைத் தோற்றுவித்தார்.

* 1405 - சீனாவிற்குச் சென்று மிங் அரசரின் ஆதரவைப் பெற்றார்.

* 1409 - பாசாய் நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். சமயம் மாறினார். மலாக்கா ஒரு சுல்தான் ராஜ்யமாக மாறியது.

* 1411 - சீனாவிற்கு மறுபடியும் சென்று மிங் அரசரிடம் பாதுகாப்பை நாடினார்.

* 1414 - தன்னுடைய 69 அல்லது 70 ஆவது வயதில் காலமானார்.

மலாக்காவைக் கண்டுபிடித்தல்

ஜாவாவை ஆண்டு வந்த ஸ்ரீ விஜயா பேரரசின் செல்வாக்கு 14 ஆம் நூற்றாண்டில் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மலாய்த் தீவுக் கூட்டங்களில் இருந்த சிற்றரசர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வந்தன.

ஸ்ரீ விஜயா எனும் பேரரசு ஜாவாத் தீவின் வரலாற்றில் மங்காதப் புகழைப் பெற்ற ஒரு மாபெரும் பேரரசு. சுற்று வட்ட அரசுகள் அனைத்தும் ஸ்ரீ விஜயா பேரரசிடம் திறை செலுத்தி வந்தன.

திறை என்றால் கப்பம். ஒரு பேரரசுக்கு மற்றொரு சிற்றரசு செலுத்தும் வரியைத் தான் கப்பம் என்பார்கள். அப்படி மற்ற சிற்றரசுகளிடம் இருந்து திறைகள் வாங்கிய ஸ்ரீ விஜயா பேரரசு, 1290 ஆம் ஆண்டில் ஜாவாவில் இருந்து விரட்டப் பட்டது.

அதன் பின்னர் ஜாவாவில் சிங்கசாரி எனும் ஒரு புதிய அரசு உருவானது. அடுத்து ஸ்ரீ விஜயா பேரரசின் செல்வாக்கும் சன்னம் சன்னமாகக் குறையத் தொடங்கியது. தொடர்ந்து சிங்கசாரி வலிமை வாய்ந்த பெரும் அரசாகவும் மாறியது.

ஸ்ரீ விஜயா பேரரசு

இந்த சிங்கசாரி அரசு, மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல் ஆகும். மலாயு எனும் இடத்தில் ஸ்ரீ விஜயா பேரரசின் அரண்மனை இருந்தது.


அந்த அரண்மனையைச் சிங்கசாரி அரசு தாக்கிய சம்பவங்கள் நிறைய உள்ளன. மலாயு எனும் இடம் இப்போது ஜாம்பி என்று அழைக்கப் படுகின்றது. பின்னர் ஸ்ரீ விஜயா பேரரசு தன்னுடைய தலைநகரத்தைப் பலேம்பாங்கில் இருந்து மலாயுவிற்கு மாற்றியது.

இருப்பினும் பலேம்பாங் முக்கியமான அரச நகராகவே விளங்கி வந்தது. 14 ஆம் நூற்றாண்டில் பலேம்பாங் அரச நகரமும் மஜாபாகிட் பேரரசின் கரங்களில் வீழ்ந்தது. அத்துடன் மாபெரும் ஸ்ரீ விஜயா பேரரசின் 1000 ஆண்டுகள் ஆளுமைக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கப் பட்டது. ஒரு சகாப்தம் வீழ்ந்தது.

பலேம்பாங் தோற்கடிக்கப் பின்னர் ஸ்ரீ விஜயா அரசக் குடும்பத்தினர் பிந்தான் தீவில் அடைக்கலம் அடைந்தனர். அத்துடன் ஸ்ரீ விஜயா அரச குடும்பத்தினருடன் பல ஆயிரம் மக்களும் அந்தத் தீவில் தஞ்சம் அடைந்தனர்.


அடுத்தக் கட்டமாக பிந்தான் தீவில் தற்காலிகமாக ஸ்ரீ விஜயா ஓர் அரசாட்சியை உருவாக்கிக் கொண்டது. அதற்கு சாங் நீல உத்தமன் என்பவர் அரசர் ஆனார். இந்தக் காலக் கட்டத்தில் துமாசிக் எனும் சிங்கப்பூரைத் தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார்.


சாங் நீல உத்தமன்

தெமாகியைச் சியாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக ஏற்கனவே நியமனம் செய்து வைத்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1324ல் பிந்தான் தீவில் இருந்து வந்த சாங் நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார்.

இதனால் சாங் நீல உத்தமன் சியாம் அரசின் கோபத்திற்கும் உள்ளானார். பின்னர் சிங்கப்பூர் ஓர் ஊர் உருவாக்கப் பட்டது. ஓர் ஊர் தான். நகரம் அல்ல. அதை உருவாக்கியவர் சாங் நீல உத்தமன். அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.

1366ல் சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் சாங் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டார். சாங் நீல உத்தமனுக்கு Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana எனும் சிறப்புப் பெயரும் வழங்கப் பட்டது.

சாங் நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ பராக்கிரம வீர ராஜா என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1372 லிருந்து 1386 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

அந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் உள் ஆட்சியில் சில திருப்பங்கள் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான். அதனால் சாங் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பதவி ஏற்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.



பரமேஸ்வராவின் வரலாற்றுப் பயணம்

இவர் சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவில் இருந்த மஜாபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அரசு ஏற்கனவே மஜாபாகித்தின் மீது சில தாக்குதல்களையும் நடத்தியுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தத் தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் படலமாக இந்த மஜாபாகித் அரசின் திடீர் தாக்குதலும் அமைந்தது.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இவர் மஜாபாகித்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்தார். அதனால் சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார்.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலேசியாவின் பழைய பெயர் மலாயா. மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் எனும் இடத்தை அடைந்தார்.

மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார்.

நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்க பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.

அப்படி போய்க் கொண்டிருக்கும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்த செனிங் ஊஜோங் இப்போது சுங்கை ஊஜோங் என்று அழைக்கப் படுகிறது.

இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது.

அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம் உருவான இடம். இந்த இடத்தில் தான் ஒரு சருகுமான் ஒரு நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. நாய் மல்லாக்காக விழுததாலும் பரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயர் மலாக்கா எனும் பெயர் கொண்டதாலும் அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வந்தது.


பரமேஸ்வராவின் திருமணம்

இந்தக் காலக் கட்டத்தில் வட சுமத்திராவில் பாசாய் எனும் ஓர் சிற்றரசு இருந்தது. இது கடல் கரையோரமாக இருந்தச் சிற்றரசு.

சுமத்திரா எனும் சொல் சமுத்திரம் எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. இந்தப் பாசாய் சிற்றரசின் இளவரசியைப் பரமேஸ்வரா 1409 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு அவர் இஸ்லாமிய சமயத்தில் இணைந்தார். தன் பெயரை இஸ்கந்தார் ஷா என்றும் மாற்றிக் கொண்டார். ஷா என்பது ஓர் அரசரைக் குறிக்கும் பாரசீகச் சொல்.

மலாக்கா சுல்தான்கள் ஆட்சி காலம்

பரமேஸ்வரா எனும் இஸ்கந்தார் ஷா 1400–1414


சுல்தான் மேகாட் இஸ்கந்தார் ஷா 1414–1424

சுல்தான் முகமது ஷா 1424–1444

சுல்தான் அபு ஷாகித் 1444–1446

சுல்தான் முஷபர் ஷா 1446–1459

சுல்தான் மன்சூர் ஷா 1459–1477

சுல்தான் அலாவுடின் ரியாட் ஷா 1477–1488

சுல்தான் முகமது ஷா 1488–1528

சமய மாற்றம்

பரமேஸ்வராவின் சமய மாற்றம் தெளிவற்ற நிலையில் இன்னும் இருந்து வருகிறது. அவர் சமய மாற்றம் செய்து கொண்டார் என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகன் 1414ல் சீனாவிற்கு விஜயம் செய்து இருக்கிறார். தன்னுடைய தந்தையார் பரமேஸ்வரா இறந்து விட்டதாகச் சொல்லியும் இருக்கிறார்.

சீனாவின் மிங் பேரரசர் பரமேஸ்வராவின் மகனை மலாக்காவின் இரண்டாவது ஆளுநராக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளார். அந்தப் பரமேஸ்வராவின் மகன்தான் ஸ்ரீ ராம விக்ரமா என்று பின்னர் அழைக்கப் பட்டார்.


அவரை பரமேஸ்வர ராஜா என்று மலாக்காவில் அழைக்கப் பட்டும் இருக்கிறார். அவருடைய குடி மக்கள் அவரை சுல்தான் ஸ்ரீ இஸ்கந்தர் சுல்கார்னாயின் ஷா என்றும் சுல்தான் மேகாட் இஸ்கந்தர் ஷா என்றும் அழைத்து உள்ளனர். இவர் மலாக்காவை 1414 லிருந்து 1424 வரை ஆட்சி செய்து உள்ளார்.


பரமேஸ்வரா இறப்பு

1414 ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் கோட்டையில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இதுவும் இன்னும் உறுதி படுத்தப் பட வில்லை. அதைப் பற்றி ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறேன்.

கென்னிங் கோட்டைக்கு அருகில் ஓர் இஸ்லாமிய இடுகாடு இன்னும் இருக்கிறது. பரமேஸ்வராவுக்குப் பின் அவருடைய மகன் மேகாட் இஸ்கந்தர் ஷா மலாக்காவை 1424 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் மலாக்காவின் மூன்றாவது ஆட்சியாளர் ராஜா தெங்ஙா என்பவர். இவரை ராடின் தெங்ஙா என்றும் அழைத்தனர். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் விருது வழங்கப் பட்டது.

இவர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவி முகமது ஷா எனும் விருதைப் பெற்றார். இவர் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டதால் பெயர் மாற்றம் கண்டிருக்கலாம் என்று கல்வியாளகள் நம்புகின்றனர்.

அவர் இறந்த பிறகு அவருடைய மகனான ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம் அரியணை ஏறினார்.

சமூகச் சச்சரவுகள்

ராஜா இப்ராகிம் ஆட்சி காலத்தில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. மலாக்காவில் வாழ்ந்த இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கும் பாரம்பரிய இந்து மலாய்க்காரர்களுக்கும் இடையே சச்சரவு உண்டாகியது.

ராஜா இப்ராகிமிற்கு இஸ்லாமியப் பெயர் இருந்தும் அவர் புதிய சமயத்தைத் தழுவவில்லை என்பது ஒரு பெரும் குறைகூறல். அவர் ஸ்ரீ பரமேஸ்வரா தேவா ஷா பெயரில் ஆட்சி செய்தார் என்பது மற்றொரு குறைகூறல்.

அந்தச் சச்சரவுகளினால் அவரால் நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியவில்லை. அதனால் பதினேழு மாதங்கள் தான் ஆட்சி செய்ய முடிந்தது. பாவம் அவர். 1446ல் அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் ராஜா இப்ராகிமின் ஒன்று விட்டச் சகோதரர் ராஜா காசிம் பதவிக்கு வந்தார்.


ராஜா காசிமின் தாயார் ஒரு தமிழ் முஸ்லிம் ஆவார். ராஜா காசிமின் பெயர் சுல்தான் முசபர் ஷா என்று மாற்றம் கண்டது. மலாக்கா சுல்தான்களின் ஆட்சியில் புதிய சகாப்தம் மலர்ந்தது. இந்தக் கட்டத்தில் இந்துக்களும் இந்து சமயமும் அதிகாரம் இல்லாமல் போயினர்.


பரமேஸ்வராவுக்குப் பின்

பரமேஸ்வரா எனும் ஒரு சாதாரண மனிதன் பகைவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்தான். எங்கே போவது என்று தெரியாமல் புகலிடம் தேடி அலைந்தான்.

வலிமையற்றது வலிமையானதைத் தோல்வி அடையச் செய்ய முடியும் என்பதைக் கண்டு அறிந்தான். அதையே ஒரு நல்ல சகுனமானக் கருதி ஓர் இருப்பிடத்தை உருவாக்கினான்.

அந்தச் சாதாரண இருப்பிடமே பின் நாளில் ஆசிய வரலாற்றில் மகத்துவம் வாய்ந்த தனிப் பெரும் வரலாறாக மாறியது. செல்வாக்கு மிக்க சக்தியாகவும் மாறியது.

மலாக்காப் பேரரசு தென்கிழக்கு ஆசியத் தீவுக் கூட்டத்தின் தலைவிதியையே மாற்றியும் அமைத்தது. உலக மன்னர்கள் வியந்து மனப்பூர்வமாகப் பாராட்டினார்கள். அண்டை நாட்டு மன்னர்கள் ஆழ்ந்த மரியாதை கொடுத்தனர்.


மலாக்காவின் செல்வாக்கு அதிகாரமும் ஆதிக்க நிலைப்பாடும் தென்கிழக்கு ஆசியத் தீவுக் கூட்டத்தில் இஸ்லாமிய சமயம் பரவுவதற்குச் சாதகமாக அமைந்தன.

1447ல் கர்த்தா விஜயா என்பவர் மஜாபாகித்தின் அரசரானார். இந்தோசீனாவில் இருந்த சம்பா நாட்டின் இளவரசியான தாராவதியை மணந்தார்.

மனைவியின் அறிவுரையின் படி இஸ்லாமியச் சமயத்தில் இணைந்தார். கர்த்தா விஜயாவின் சகோதரர்களில் ஒருவரான சுனான் அம்பேல் என்பவர் ஜாவா சுராபாயாவில் இஸ்லாமியச் சமயம் பரவுவதற்கு மிகுந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டார்.

அந்தக் காலக் கட்டத்தில் பலேம்பாங் இஸ்லாத்திற்கு மாறியது. 1459ல் சுல்தான் மன்சூர் ஷா கெடா, பகாங் மீது தாக்குதல்கள் நடத்தினார். வெற்றியும் பெற்றார். பகாங் நிலப் பகுதி மலாக்காவின் ஆளுமையின் கீழ் வந்தது.

இந்தச் சமயத்தில் வேறு ஒரு நிகழ்ச்சியும் நடந்தது. 1470ல் சம்பாவில் ஏற்பட்ட படுகொலைகளில் இருந்து தப்பித்த 60,000 பேர் மலாக்காவில் தஞ்சம் அடைந்தனர்.


பரமேஸ்வராவின் வாணிக மையங்கள்

1400ஆம் ஆண்டுகளில் மலாக்கா பரமேஸ்வராவின் ஆட்சி காலத்தில் மலாக்கா மிகவும் புகழ் பெற்ற வாணிகத் துறைமுகமாக விளங்கியது. அங்கே 80 மொழிகள் பேசப் பட்டன என்பது எல்லாம் வரலாற்றுச் சான்றுகள்.

உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அந்த இடங்களின் விவரம் வருமாறு:

தமிழ் நாடு, கெய்ரோ, ஏடன், ஓர்முஸ். ரோமாபுரு, துருக்கி, குஜாராத், கோவா. மலாபார், ஓரிசா, ஸ்ரீ லங்கா. வங்காளம், சியாம், கெடா, பகாங்,

பட்டானி, கம்போடியா, சம்பா, கொச்சின், புருணை, லிங்கா, மினாங்கபாவ், பாசாய், மாலைத் தீவுகள்.

16 ஆம் நூற்றாண்டில் கீழைத் தேச நாடுகளில் மலாக்கா மிகவும் முக்கியமான துறைமுகமாக விளங்கியது.
அதன் செல்வ வளப்பத்தைக் கண்டு தோம் பைரஸ் (Tom Pires) என்பவர் “யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ அவர் வெனிஸ் நகரின் கழுத்தின் மீது கை வைத்தது போல் ஆகும்” என்று சொன்னார்.
தோம் பைரஸ் ஒரு போர்த்துகீசிய வணிகர், எழுத்தாளர் ஆகும்.